27 மே, 2013

ஏங்குகிறோம் அப்பா !!


தங்கள் பிறந்த நாளை கொண்டாடி பத்து வருடங்கள் ஆகிறது !!

நினைக்கையில் தொண்டைக்குழி அடைத்து, கண்கள் அருவியாகிறது...
அன்று தெரிந்திருக்கவில்லை இதுவே கடைசி முறை என்று....
தெரிந்திருந்தால், உலகமே ஸ்தம்பித்து விட அன்றே வேண்டியிருப்பேன்...
உங்களின் பொன்னான வார்த்தைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்திருப்பேன்...
அன்றிலிருந்தாவது உங்கள் பேச்சை கேட்டு நடக்க முனைந்திருப்பேன்...
தங்கள் புத்தகங்களையும், கவிதைகளையும் படித்து படித்து நெகிழ்ந்திருப்பேன்...
இப்படி எத்தனை கனவிருந்தும், நடவாது என்பதை நினைத்தால் நெஞ்சனைத்தும் நஞ்சாகிறது...

என்றும் உங்கள் அன்புக்கும், அரவணைப்புக்கும், அறிவுரைக்கும் ஏங்கித்தவிக்கிறோம் அப்பா !!

23 மே, 2013

பக்குவம்


இருட்டு, உயரம், பாம்பு, விபத்து, பிரிவு என 
நான் பயந்த ஒவ்வொரு விஷயத்தையும்
திரும்ப திரும்ப செய்தோ, பழகியோ, புரிந்துகொண்டோ, 
எப்படியோ அறவே பயமறுக்க பழகிக்கொண்டாலும்,
இந்த பாழாய்ப்போன தனிமையை மட்டும் 
பழகிக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியவில்லை
ஒவ்வொரு முறையும் நான் பயந்து நடுங்கி 
தோற்றுப்போகும் விடாக்கொண்டனாகவே இருந்து வருகிறது.
அடுத்த முறையேனும் தனிமையை ரசிக்கும் 
மனப்பக்குவம் வேண்டுமென தவிக்கிறேன் !!