16 ஜூலை, 2014

தமிழ் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ !!

மகாகவி பாரதியார் மற்றும் அவர் மனைவி செல்லம்மாவின் வாழ்க்கை சரித்திரத்ததில் இருந்து ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது:

ஒரு முறை பாரதியார் கல்கத்தாவில் விவேகானந்தரின் சீடர் நிவேதிதா தேவியை சந்திக்கிறார், அந்த சுவாரசியம் மிகுந்த சந்திப்பில் சமுதாயத்திலும் விடுதலை போராட்டத்திலும் பெண்களின் பங்கு எவ்வளவு அவசியம் என்று தெரிந்து கொள்கிறார். அன்றே உருவாகிறாள் 'பாரதி கண்ட புதுமைப்பெண்' என்ற கதாபாத்திரம்.... அல்லது கவிப்பாத்திரம். அன்று முதல் தன் மனைவி செல்லம்மாவை வீரமும், விவேகமும், வெற்றி வாகை சூடும் புதுமை பெண்ணாகவும் குறிப்பிட வேண்டிய கவிதைகளில், அவரை 'சக்தி' என்றும், 'பராசக்தி' என்றும் குறிப்பிடுகிறார். அதே போல் தன் மனைவி செல்லம்மாவை ஒரு செல்ல குழந்தையாகவும், வருங்காலத்தில் அன்பாகவும் பண்பாகவும் வளரவேண்டிய பிள்ளையாகவும் எண்ணிய கவிதைகளில், அவரை 'கண்ணம்மா' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். நாகரீகம் கருதி அவர் மனைவியின் இயற்ப் பெயரை விடுத்து, 'கண்ணம்மா' என்ற புனைப் பெயரே எல்லா இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக, விடுதலை வேட்கை கொண்ட பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகவும், அவரின் செல்ல குழந்தை கண்ணம்மாவாகவும் வாழ்ந்தவரே அவர் மனைவி செல்லம்மா !!


இதே போல், பாரதியார் இருந்த போதும், இறந்து விட்ட போதும் அவரின் மனைவி செல்லம்மா தன்  மகள்கள் தங்கம்மாள் பாரதியையும், சகுந்தலா பாரதியையும் வளர்க்க அரும்பாடுபட்டார். பாரதியின் கவிதைகளையும் இலக்கியங்களையும் பதிப்பகம் மூலம் வெளியிட தன் வாழ்நாள் முழுவதும் போராடி களைத்த அவர், 1955-ல் தன் வாழ்வின் கடைசி நாட்களில் கோமா (Coma) நிலைக்கு தள்ளப்பட்டார். பல நாட்கள் கோமாவில் இருந்த அவர், திடீரென்று ஒரு நாள் பாரதியின் கண்ணன் பாட்டில் இருந்து இந்த பாடல் வரிகளை பாடுகிறார்:

"திண்ணை வாயில் பெருக்க வந்தேன் எனைத்
தேசம் போற்றத் தன் மந்திரி ஆக்கினான்"

"திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்"

இதுவே அவரின் கடைசி வார்த்தைகள். பின்னர் அவர் இறைவனடி சேர்ந்தார். அவர் சேர்ந்த இறைவன் யார் என்றும், கோமாவில் இருந்த அவரின் நெஞ்சு நிறைய புகுந்த திருமால் யார் என்றும் நான் கூறி உங்களுக்கு புரிய வேண்டிய அவசியம் இல்லை.

தமிழுக்காகவே தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த இந்த மாபெரும் அக்னி குஞ்சுகளின் உறவை என்னவென்று வர்ணிப்பது:
சக்தியும், அவளை சேர்ந்த சக்திதாசனும் என்றா...... அல்லது
பாரதியும், அவரின் செல்லப்பிள்ளை கண்ணம்மாவும் என்றா...... அல்லது
கண்ணனும், அவனை இழந்து தவித்த செல்ல அம்மாவும் என்றா...... அல்லது
செல்லம்மாவும், அவர் சென்றடைந்த திருமாலும் என்றா...... அல்லது
தமிழ்க் காதலின் ஒவ்வொரு உருவையும் வாழ்ந்து காட்டிய விடுதலை பறவைகள் என்றா !!


"அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ."
மகாகவி பாரதி

தமிழ் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ !!
மகாகவி பாரதியாருக்கும் அவர் மனைவி செல்லம்மாவிற்கும் என் அர்ப்பணிப்பு